Tuesday, February 07, 2006

கோணம் - இந்நாட்டு மன்னர்களின் இளைப்பாறுமிடம்.

அது என்ன கோணம்? கணித - வடிவியல் பாடத்தில் படித்த செங்கோணம், குறுங்கோணம் பற்றி பாடமெடுக்கப் போகிறேன் என்று தவறாக நினைத்து விட வேண்டாம். என் மண்ணில் உள்ள அதி முக்கியமான ஓர் இடத்தின் பெயர் தான் கோணம். வித்தியாசமாக இருக்கிறதல்லவா? அது என்னமோ தெரியவில்லை இந்த குமரி மாவட்டக் காரர்கள் வித்தியாசமாக தேடித் தேடி தான் இடங்களுக்கு பெயர்கள் சூட்டியிருப்பார்கள் என நினைக்கத் தோன்றுகிறது. சில இடங்களின் பெயர்களைக் கேட்டால் கண்டிப்பாக சிரிப்பு வரும். உதாரணமாக,

பண்ணிப்பொத்தை, கோழிப்போர் விளை, வட்டம், இஞ்சி விளை, மாமூட்டுக்கடை, கருங்கல்,பேயங்குழி என அப்படியே அடுக்கிக் கொண்டு போகலாம்.

இது போன்று ஒரு பெயர் தான் கோணம். இதே பெயரில் குமரி மாவட்டத்தில் ஒரு ஊரும் இருக்கிறது. அது நாகர் கோயிலை அடுத்து உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் அரசு பாலிடெக்னிக்கும் உள்ளது. இதே பெயரில் என் மண்ணில் ஒரு இடத்தின் பெயர். இரண்டையும் தொடர்புபடுத்தி சிந்தித்தால் சிரிப்பு தான் வருகிறது.

ஒரு விதத்தில் ஒரு சிறிய தென்னந்தோப்பு தான் எங்கள் ஊர் கோணம். இந்நாட்டு மன்னர்களை உருவாக்கும் எங்கள் ஊர் அரசு மேல் நிலைப் பள்ளியின் பின் புறம் அமைந்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களின் இளைப்பாறும் நந்தவனச்சோலை என்றும் கூறலாம். மதிய வேளையில் பெரும் பாலான மாணவர்கள் தங்கள் மதிய உணவினை இங்கு அமர்ந்து தான் சாப்பிடுவார்கள்; தொடர்ந்து சுகமான ஒரு நித்திரையும்.

வகுப்பிலிருந்து ஆசிரியர்களால் வெளியேற்றப்படும் மாணவர்களுக்கும், வகுப்பினை கட் அடிக்கும் மாணவர்களுக்கும், பிஞ்சிலேயே பழுக்கும் சில அதிகப்பிரசங்கிகளுக்கும் இவ்விடம் ஓர் அற்புதமான புகலிடமாகும்.

இவ்விடம் மற்றொரு விஷயத்திற்கும் பிரசித்தி பெற்றது. சினை(கர்ப்பம்) தரிக்காத மாடுகளை சேர்ப்பதற்காக அதற்கென்றே பழக்கப் படுத்திய ஓர் காளை இங்குண்டு - தேர்ந்த ஓர் காளை சேர்ப்பவனும்(!). அந்த ஆள் உயிரோடு இருந்த வரை கோணமும் பள்ளிக்கூடமும் இரண்டற கலந்திருந்தன. அந்த அளவிற்கு பள்ளிக் கூடத்தில் இருக்க வேண்டிய மாணவர்களில் ஒரு சிறு பகுதி எப்பொழுதும் இங்கும் காணப்படும். அந்த ஆள் அவர் வளர்த்த காளை குத்தி இறந்ததோடு அக்காளையை விற்று விட்டார்கள். அதோடு கோணத்திற்கு வேலியும் விழுந்து விட்டது. இப்பொழுதெல்லாம் பள்ளிக் கூட மாணவர்கள் இந்தப் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை.

கோணத்திற்கு வேலி விழுந்ததோடு பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு கட் அடிப்பது குறைந்ததோ இல்லையோ, ஆசிரியர்கள் கையில் கம்பை எடுத்துக் கொண்டு தினமும் கோணத்தில் மாணவர்களை விரட்டும்(வகுப்பு நேரங்களில்) கண்கொள்ளா காட்சி இப்போது குறைந்து விட்டது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Sunday, February 05, 2006

தனிச் சிறப்புக்கள்

என் மண்ணுக்கென்று பல தனிச் சிறப்புக்கள் உண்டு. இந்தியாவிலேயே கல்வியறிவில் முதன்மையான மாவட்டமான கன்னியாகுமரியிலுள்ள பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதியின் ஒரு அங்கம் தான் என் நேசத்திற்குரிய மண். வரலாற்று சிறப்புமிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரம் பத்மனாபபுரம் இங்கிருந்து வெறும் இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். எழில் மிகு அரண்மனையும் இவ்விடமுண்டு.

கன்னியாகுமரியின் தந்தை என்று எங்களால் போற்றப்படும் நேசமணி அவர்களின் இடைவிடாத போராட்டத்தினால் கன்னியாகுமரியின் மாவட்டத்தின் ஒரு பகுதி கேரளாவிலிருந்து பிரிந்து தமிழ் நாட்டோடு இணைக்கப்பட்டதோடு இவ்வரண்மனையும் தமிழ் நாட்டோடு ஐக்கியமாகி விட்டது. எனினும் இதன் பராமரிப்பு தற்போதும் கேரள அரசின் கையிலேயே உள்ளது.

என் மண்ணின் தனிச் சிறப்புக்கள் சில:

1. இந்தியாவிலேயே மிகப்பழமையான (சிலரால் இந்தியாவின் முதல் தேவாலயம் என அழைக்கப்படுகிறது) கிறிஸ்தவர்களின் புனித ஆலயம் என் மண்ணில் இடம் பெற்றுள்ளது.

2. தென்னகத்தில் ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தினை பரப்புவதில் மிகப் பெரும் தொண்டாற்றிய மகான் மாலிக் முகம்மது ஒலியுல்லா அவர்களின் கல்லறையுடன் இணைந்த பள்ளிவாயில் என் மண்ணின் மையத்தில் கண்கவர் காட்சியாக இடம் பிடித்துள்ளது.

3. இந்துக்களின் ஒன்பது சிவஸ்தலங்களில் ஒன்று என் மண்ணில் அமைந்து என் மண்ணின் பெருமையை சுற்றிலும் உள்ள மக்களுக்கு எடுத்தியம்புகிறது. சிவாலய ஓட்டத்தில் பங்கு பெறும் பக்தர்கள் என் மண்ணின் மையமான நடுக்கடையை தடவாமல் மேலே செல்ல முடியாது.

4. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களின் மக்களை அன்போடு அரவணைத்து செல்லும் ஒரு மத சகிப்புத் தன்மை மிக்க மண் என்று என் பாசத்துக்குரிய தாய்மண்ணினை குறிப்பிடலாம்.

ஒவ்வொரு ஆலயங்களின் திருவிழாவிற்கு மற்ற சமுதாய மக்கள் எவ்வித வேற்று வெறுப்புமின்றி கலந்து கொள்வதிலிருந்து இதனை புரிந்து கொள்ளலாம்.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Wednesday, January 25, 2006

நடுக்கடை ஜங்சன்!

என்னை என் தந்தைக்கு பிறக்க இடம் கொடுத்த, நான் நேசிக்கும் மண்ணின் பிரதான இடங்களில் ஒன்று தான் நடுக்கடை ஜங்சன். அது ஒன்றும் வித்தியாசமான இடமில்லை தான். ஆனாலும் அதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. என்னை எனக்கும் என் மண்ணின் மைந்தர்களுக்கும் அடையாளம் காட்டிய இடம் இது. ஆம் எனக்கென ஒரு வித்தியாசமான நண்பர்கள் வட்டத்தை பரிசாக அளித்த இவ்விடத்தை என் உயிருள்ளவரை என்னால் மறக்க முடியாது. அது மட்டுமல்ல, இது தான் உலகம் எனவும் மனிதர்களின் உண்மையான முகங்களையும் எனக்கு அடையாளம் காட்டியதும் இவ்விடம் தான்.

என் மண்ணின் ஒரே ஒரு நான்கு முனை ரோடுகளின் சந்திப்பு தான் இவ்விடம். நான்கு முனை சந்திப்பு என்றவுடன் பெரிதாக இருக்கும் என நினைத்தால் அது என் தவறு அல்ல. ஆனால் அத்தனை முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு என்றும் கூறிவிட முடியாது. என் மண்ணின் பிரதான கடை வீதியும் இது தான். மட்டுமல்ல மூன்று சக்கர, நான்கு சக்கர(டாக்ஸி) வாடகை வாகனங்களின் நிறுத்துமிடமும் இதில் தான் உள்ளது.

என் மண்ணின் மனிதர்கள் எங்கு செல்ல வேண்டுமெனினும் வர வேண்டிய அல்லது கடக்க வேண்டிய முக்கிய இடமும் இது தான். அதனால் தானோ என்னவோ இவ்விடத்திலேயே வாழ்நாளின் ஒரு பகுதியை கழிக்க வேண்டி வந்த எனக்கு மனிதர்களிக் குறித்து நன்றாக அறியவும் புரியவும் முடிந்தது.
இப்பொழுது நான் யார் என புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆம் நான் ஒரு வாடகை மூன்று சக்கர வாகன ஓட்டி. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மொழியில் "நான் ஒரு ஆட்டோக்காரன்". பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் தருணம் வரை வகுப்பில் முதல் மாணவனாக இருந்த நான் ஒரு ஆட்டோகாரனாக ஆனது எப்படி? ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது தான் உண்மை. அதனை பின்னர் பார்க்கலாம். ஆனால் ஒரு விஷயம் கூறித் தான் ஆக வேண்டும். ஆட்டோக்காரனாக ஆனது கொண்டு எனக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடவில்லை. அதனால் எனக்கு வாழ்வில், நல்ல மனமுள்ள எனக்காக என்ன வேண்டுமெனினும் செய்ய தயாரான சிறந்த நண்பர்களை பெற்று தந்தது. அதைவிட சமூகத்தில் வெள்ளையுடையில் நடக்கும் பல பெரிய மனிதர்களின் சுய ரூபங்களை காட்டி இது தான் உலகம் என எனக்கு உலகத்தைக் கற்றுத் தந்தது.
எதையோ கூற வந்து எதையோ கூறிக் கொண்டிருக்கிறேன். முதலில் என் மண்ணின் சில பெருமைகளையும் அதன் சிறப்பம்சங்களையும் பதித்து விட்டு அவற்றைப் பற்றி கூறுகிறேன். .

என் மண்ணுக்கு நடு நாயகமான நடுக்கடை ஜங்சனில் முக்கியமான மற்றொன்றும் உண்டு. அது, மகான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்(ரலி) அவர்களின் தர்கா மற்றும் ஜும்மா பள்ளிவாசல். இந்தியாவில் ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை பரப்பிய மகான்களில் ஒருவரான மாலிக் முஹம்மது அவர்களின் அடக்க ஸ்தலம் தான் அது. வருடம் தோறும் நடக்கும் ஆண்டு விழாவில் பலபாகங்களிலிருந்தும் மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் இங்கு வந்து கூடுவது ஒரு சிறப்பம்சமாகும்.

நடுக்கடை ஜங்சனில் சூரியன் உதிக்கும் திசையை நோக்கி நின்றால், முன் செல்லும் சாலை தக்கலை வழி நாகர்கோவில் சென்றடையும். பின் புற சாலை எனக்குப் பிடித்த என் "அமராவதி" குளக்கரைக்கு சென்று விடும். என் புரபைலை காண்பவர்களுக்கு "அமராவதியின்" தோற்றத்தை காணலாம். அந்த சாலை வழி போனால் பிரபலமான "நூருல் இஸ்லாம் பாலிடெக்னிக்" மற்றும் திருவனந்தபுரம் சென்றடையலாம். நடுக்கடை ஜங்சனிலிருந்து இடது புறம் செல்லும் சாலையில் சென்றால் அழகிய மண்டபம் வழி பேச்சிப்பாறை, ஆசியாவிலேயே உயரமான தொட்டிப் பாலம், திற்பரப்பு அருவி போன்ற இடங்களை அடையலாம். நடுக்கடை ஜங்சனிலிருந்து வலது புறம் செல்லும் சாலை திங்கள் நகர் வழி மண்டைக்காடு, குளச்சல், மணவாளக் குறிச்சி போன்ற கடற்கரை கிராமங்களுக்கு கொண்டு விடும். அதைவிட முக்கியமானது இந்தப் பக்கம் தான் நான் பெருமை கொள்ளும் என் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

Monday, January 23, 2006

திருவிதாங்கோடு!

பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இறங்கிப் பார்த்தால் என்ன என்று தோன்றுமல்லவா? அந்த ரகத்தைச் சேர்ந்தவன் நான். எவ்வளவு நாள் தான் நான் பிறந்த என் மண்ணை விட்டு நீங்கி இருப்பது? என் பிறந்த மண்ணின் வாசம் என்னை விட்டு போகாமல் இருக்க, என் மண்ணின் நினைவுகள் என்னை என்றும் சுற்றி வட்டமிட இலவசமாக இடத்தினை வாரி விளம்பும் பிளாக்கர் நண்பனின் ஒரு சிறிய இடத்தில் என் மண்ணின் நினைவுகளை என்றும் புதுப்பிக்க எண்ணம். என் மண்ணுக்கு என்னால் ஆன கைம்மாறாகவும் இதனை ஆக்க ஆசை. வரும் நாட்களில் அதனை நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.

அழகு அமராவதியிலிருந்து.......

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது